திருச்சியில் ரயில் பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு
திருச்சி ரயில் நிலையத்தில், இன்று ரயில் பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.;
திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே யார்டு உள்ளது. இங்கு ரயில் பெட்டிகள் துாய்மை படுத்தும் பணி, பராமரிப்பு, சிறிய பழுது நீக்கும் பணி உள்ளிட்டவை நடைபெறும். பெரிய அளவிலான பழுது என்றால், திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில், இன்று பகல் பராமரிப்பு பணிக்காக, யார்டுக்கு வந்த 13 ரயில் பெட்டிகள், திருச்சி பொன்மலை பணிமனைக்கு, கொண்டு செல்லும் போது, 3 வது ரயில் பெட்டியின் சக்கரமானது, தண்டவாளத்தை விட்டு இறக்கியது. பெரும் சத்தம் கேட்ட ரயில் லோகோ பைலட், உடனடியாக ரயிலை நிறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் திருச்சி கோட்ட கூடுதல் மேலாளர் தண்டவாள பொறியாளர்களும், சிக்னல் பொறியாளர்கள், ரயில் அதிகாரிகளும், பணியாளர்களும் தடம் புரண்ட இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர்.
அப்போது, பாய்ண்ட் பகுதியில் சக்கரம் இறங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த ரயில் பெட்டியானது, திருச்சி - மதுரை வழிதடத்தில் விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக ஏனைய ரயில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடாது என்று, ரயில் பெட்டியை நிலை நிறுத்தும் பணியானது நவீன இயந்திரங்களின் உதவியுடன் துரித கதியில் நடைபெற்றது. இதன் காரணமாக மீண்டும் ரயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு, அந்த பெட்டியானது யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரயில் பெட்டிகள், மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதால் பெரிய அளவு விபத்து தவிர்க்கப்பட்டது.