திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.600 கோடியில் ‘டைடல் பார்க்’ அமைக்க முடிவு
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.600 கோடியில் ‘டைடல் பார்க்’ அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் எளிதாக தொடர்பு மற்றும் இணைப்பு போக்குவரத்து வசதிகள் குறைந்த செலவு ஆகியவறறின் அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
திருச்சியை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய செய்யும் வகையில் ரூ.600 கோடி மதிப்பீட்டில், எல்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென் பொருள் நிறுவனங்கள் மையமான டைடல் பார்க் அமைக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சியில் டைடல் பார்க் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை சென்னை டைடல் பார்க் நிறுவன அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். அதன்பிறகு திருச்சி- மதுரை சாலையில் 14 ஏக்கர் நிலம் கேட்டு டைடல் பார்க் சார்பில், மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தற்போது ஒருங்கிணைந்த பஸ் நிலையம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பஞ்சப்பூரிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை வழங்க மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இப்பணியின் அடுத்த கட்டமாக 10 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்ட வடிவமைப்புக்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டைடல் பார்க் நிறுவனம் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கையில், திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் முதற்கட்டமாக 5.5 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொட ங்கி நடந்து வருகிறது என்றனர்.