திருச்சி: குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி மாநகரில் தொடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
திருச்சி மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் நடை பெறாவண்ணம் தடுக்கவும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. அதன்படி கோட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரகுமார் (வயது 25), அனந்தராம் (30) ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 546 கிலோ 800 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த போது கோட்டை போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் எடலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த ரெத்தினவேல் என்பவர் அதே பகுதியில் உள்ள பசுமை பூங்காவில் ஒரு பெண்ணை மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். அவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் ரெத்தினவேல் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. எனவே, மகேந்திரகுமார், அனந்தராம், ரெத்தினவேல் ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது. மேலும், திருச்சி மாநகரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.