வீடு இடிந்ததில் 4 பேரை பறி கொடுத்தவருக்கு திருநாவுக்கரசர் எம்.பி. ஆறுதல்
வீடு இடிந்ததில் 4 பேரை பறி கொடுத்தவருக்கு திருநாவுக்கரசர் எம்.பி. ஆறுதல் கூறினார்.
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் ரயில் நகர் காந்தி குறுக்குத்தெருவை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டுனரான மாரிமுத்து தனது தாய் சாந்தி (வயது70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (11), ஹரிணி (9) என ஐந்து பேருடன் தனது வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் மாரிமுத்துவின் தங்கை பிரியாவின் கணவர் ரவி சென்னையில் நேற்று முன்தினம் இறந்து விட்டதாக தகவல் வந்தது. அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று சென்னைக்கு சென்ற நிலையில் வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேர் தங்களின் அன்றாட பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் இரவு உறக்கத்திற்கு சென்றனர்.
இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவர்களது வீட்டின் உட்புற சுண்ணாம்பு காரையிலான மேற்கூரை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த மாரிமுத்துவின் தாய் மற்றும் அவரது மனைவி இரு பெண் குழந்தைகள் உட்பட நான்கு பேரும் பரிதாபமாக பலியாயினர்.
இந்த விபத்து குறித்து அறிந்த முன்னாள் மத்திய அமைச்சரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான சு. திருநாவுக்கரசர் நேரில் சென்று மாரிமுத்துவுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் விபத்து நடந்த வீட்டினை ஆய்வு செய்தவர் விரைவில் உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
அப்போது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோவிந்தராஜ், காட்டூர் கோட்டதலைவர் ராஜா டேனியல், அழகர், ஜாகிர், ஜான் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.