திருநாவுக்கரசர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்த காங்கிரசார்
திருநாவுக்கரசர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனு சத்திய மூர்த்தி பவனில் விருப்ப மனு அளித்தனர்.
முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர் திருநாவுக்கரசர். இவர் தற்போது திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஆக இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை விட சுமார் நான்கரை லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று அபார வெற்றி பெற்றார்.
ஆனால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்க கூடாது என காங்கிரஸ் கட்சியினரே போர்க்கொடி தூக்கினார்கள். இதன் காரணமாக திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறித்து மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
திருச்சி தொகுதி இல்லாததால் திருநாவுக்கரசருக்கு வேறு ஏதாவது தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என தெரியவில்லை. இந்த நிலையில் திருச்சியில் உள்ள திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் திருநாவுக்கரசர் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வழங்கினார்.
நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பெனட் அந்தோணிராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ பி சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், திருச்சி மாநகர மாவட்ட பொருளாளர் முரளி ,ஸ்ரீரங்கம் கோட்டதலைவர் ஜெ. ஜெயம் கோபி, மாவட்ட பொதுச்செயலாளர் எழிலரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.