திருச்சியில் வறட்சியை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி

திருச்சியில் வறட்சியை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.

Update: 2022-08-24 11:11 GMT

திருச்சியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்தது.

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் சீமைக் கருவேல மரம்அகற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார் , தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா,கன்மலை டிரஸ்ட் வில்பர்ட் எடிசன்,அக்னி சிறகுகள் மகேந்திரன், சுகு, நிரோஷ், ஆரிப் உட்பட பல தன்னார்வலர்கள்நிகழ்வில் பங்கேற்றனர்.

இது குறித்து மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம்,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பெ.விஜயகுமார் கூறுகையில்,

சீமை கருவேலமரம் தாவரத்தின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora). தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான் , காட்டுக் கருவல், வேலிக்கருவல் என்று பல்வேறு வட்டார பெயர்கள் இதற்குண்டு. மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. சீமை கருவேலமரத்தால் நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன, கால்நடைகளுக்கு உணவாகும் புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்து கொள்வதால் இவை அதிகமாக பரவியிருக்கும் இடங்களில் வறட்சி ஏற்படுகிறது. விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு விதைகள் கொண்டுவரப் பட்டு தூவப்பட்டன.

ஆறு, ஏரி, கண்மாய் , குளம் என்று நீர்நிலைகளில் பரவி வந்த சீமைக் கருவேலமரம் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது. அடுப்பெரிக்கவும், விவசாய பகுதிகளைக் பாதுக்காக்கும் வேலியாகவும் பயன்பட்டு வந்த இந்த மரங்கள் நாளடைவில் கட்டுப்பாடற்று விதை பரவி விவசாய நிலங்களிலும் வளர ஆரம்பித்து விட்டது. அதற்கு ஏற்றவாறு தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அகற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இப்பணியினை ஒவ்வொருவரும் முன்னெடுத்தால் தான் சாத்தியப்படும்.அதற்கு சமூக சேவையில் ஈடுபட்டுள்ளோர் மாணவர்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ,மரங்களை வேரோடு அகற்றுதல், மண்ணுக்கு ஏற்ற தாவரங்களை நட ஊக்குவித்தல்என செயல்பட வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News