ரேஷன் கடை அமைக்க நிதி ஒதுக்கிய எம்.எல்.ஏ.விற்கு நன்றி தெரிவித்த நல சங்கத்தினர்
திருச்சியில் ரேஷன் கடை அமைக்க நிதி ஒதுக்கிய எம்.எல்.ஏ.விற்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.;
திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தினர் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதய ராஜை சந்தித்து சால்வை அணிவித்தனர்.
திருச்சியில் ரேஷன் கடை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்த சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிற்கு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் நான்கு 61 வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி. ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி குடியிருப்பு வாசிகள் காந்திநகர், காஜாமலை ,டிவிஎஸ் நகர் ஆகிய மூன்று இடங்களில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டியது உள்ளது. இதனாால் பெண்கள் முதியவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
ஆதலால் தங்கள் பகுதியிலேயே ஒரு நியாய விலை கடை அமைத்து தரும்படி ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதய ராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஜே.கே. நகர் விரிவாக்க பகுதிக்கு வந்து நேரில் பார்வையிட்டார்.
ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி பூங்கா அருகில் நியாயவிலை கடை அமைப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்தார்.அதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஜே.கே. நகர் விரிவாக்க பகுதியில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கு ரூ. 12. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ரேஷன் கடை அமைப்பதற்கான பூர்வாங்கபணிகளை தொடங்கியுள்ளது. டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நல சங்க தலைவர் திருஞானம், செயலாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் நேற்று சட்டமன்ற உறுப்பினர்இனிகோ இருதயராஜை நேரில் சந்தித்து சால்வை அனுப்பி அவருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து தங்கள் பகுதியில் மேம்பாட்டு பணிகளுக்கு ஆதரவளித்து வருவதற்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.