சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூவருக்கு தலா 20 ஆண்டு சிறைத்தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூவருக்கு தலா 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-01-11 14:31 GMT

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் (கோப்பு படம்).

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி பொறுப்பேற்ற பின்னர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க போலீசாருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருச்சியை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கு நீதிமன்றம் தலா இருபது ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 16 -8 -2020 ஆம் ஆண்டு தனது  வீட்டில் தனிமையில் இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் பசுபதி (வயது 27) ஆனந்த் மகன் வரதராஜ் (29 ),திருவரங்கம் மகன் திருப்பதி (29 )ஆகிய மூன்று பேரும் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் பசுபதி உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் புலன் விசாரணை நடத்தி மூன்று பேர் மீதும் திருச்சி மகிளா கோட்டில் கடந்த 23 -9 -2020 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஸ்ரீ வட்சன் முன்னிலையில் நடந்து வந்தது. சாட்சிகள், சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. பசுபதி, வரதராஜ் மற்றும்  திருப்பதி ஆகிய மூவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதால்  மூவருக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தலா 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், மேலும் இன்னொரு சட்ட பிரிவினில் நான்காயிரம் ரூபாய் அபராதமும் 5 வருட சிறை தண்டனையும், இன்னொரு பிரிவின் கீழ் ஒரு வருட சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கில் போலீசார்  தரப்பில் வழக்கறிஞர் ஜாகிர் உசேன் ஆஜராகி வாதாடினார். வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை  செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த ஸ்ரீரங்கம் அனைத்து மாநில காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் மேற்பார்வையில் பணிபுரிந்த போலீசாரை மாநகர காவல் ஆணையர் காமினி பாராட்டி உள்ளார்.

Tags:    

Similar News