திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று துவக்கம்
திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று துவக்கி வைக்கப்பட்டது.;
திருச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாநகராட்சி மேயர் அன்பழகன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினைத் இன்று (09.01.2023) தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள நாச்சியார் கோவில் நியாய விலைக் கடையில் வணக்கத்திற்குரிய திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000- ரொக்கம், ஆகியவற்றை 2,19,33,342 குடும்பங்களுக்கு 2429.05 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பின்படி, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000- ரொக்கம் ஆகியவற்றை வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (9.1.2023) சென்னை கடற்கரை சாலை, சத்யா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள நாச்சியார் கோவில் நியாய விலைக் கடையில் வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் அபிபுல்லா, மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 8 இலட்சத்து 32 ஆயிரத்து 677 குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி 1258 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற நாள் ஒன்றுக்கு 300 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் வழங்கும் வகையில் 03.01.2023 முதல் 8ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இன்று 09.01.2023 முதல் 13.01.2023 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள் மற்றும் நேர விவரப்படி குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவது தொடர்பான புகார்கள் ஏதுமிருப்பின் 7338749300 மற்றும் 7338749305 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.