ரெயில் பயணிகளிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்சியில் ரெயில் பயணிகளிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் ரயில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி பொறுப்பேற்ற பின்னர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க போலீசாருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் கடந்த 6-12- 2023 ஆம் தேதி ரயிலுக்காக காத்திருந்த பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் திருச்சி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி பீம நகரை சேர்ந்த சைமன் கிஷோர் என்கிற கில்லர் (வயது 21 )என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் எதிரி சைமன் கிஷோர் கில்லர் என்பவர் மீது திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பொதுமக்களின் உடமைகளை திருடியதாக ஒரு வழக்கும், திருச்சி மாநகர எல்லையான பாலக்கரை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி என ஐந்து வழக்குகளும், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், தில்லை நகர் மற்றும் கே.கே. நகர் காவல் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கு உட்பட 13 வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே சைமன் கிஷோர் கில்லர் என்பவர் தொடர்ந்து ரயில் பயணிகளிடம் தொடர்ந்து கத்திய காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறிக்கும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரிய வந்ததால் அவரை தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி இருப்பு பாதை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள சைமன் கிஷோர் கில்லரிடம் மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த குண்டர் தடுப்பு சட்ட சட்டத்திற்கான ஆணை சார்வு செய்யப்பட்டது.
திருச்சி மாநகரில் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, மற்றும் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தொடர்ந்து குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டு பிடிக்கப்பட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.