பட்டு விவசாயிகள் 8 பேருக்கு பவர் டில்லர் கருவி வழங்கினார் கலெக்டர்
திருச்சி மாவட்டத்தில் பட்டு விவசாயிகள் 8 பேருக்கு பவர் டில்லர் கருவிகளை கலெக்டர் சிவராசு வழங்கினார்.;
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள், குறைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சிவராசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவற்றை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் குடும்ப அட்டைகள் தொடர்பான மனுக்கள் ஏராளமாக வந்து இருந்தன.
இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி பட்டு விவசாயிகள் 8 பேருக்கு தலா ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள பவர் டில்லர் கருவிகளை வழங்கினார். மேலும் மூன்று முன்னோடி விவசாயி களுக்கு பரிசுத் தொகையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், பட்டு வளர்ச்சி துறை துணை இயக்குனர் சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.