திருச்சி கோட்டை பகுதியில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் இளம்பெண் கைது

திருச்சி கோட்டை பகுதியில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2022-01-23 04:01 GMT

கோட்டை காவல் நிலையம் (பைல் படம்).

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கடந்த 14-ஆம் தேதி வாலிபர் ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்திய போது, இறந்த வாலிபர் ஸ்ரீரங்கம் நெல்சன்ரோடு மொட்டை கோபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (எ) அரவிந்த்குமார் (28) என்பது தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று மது போதையில் இருந்தவர், சிந்தாமணி அண்ணாசிலை அருகே உள்ள அண்ணாநகரில் பனையடியான் மனைவி பிச்சையம்மாள் (வயது 48) என்பவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

இதை பார்த்து கூச்சலிட்டதால் தப்பியோடிய அரவிந்த்தை பிச்சையம்மாள் மற்றும் இவரது மகன்கள் மணிகண்டன் (வயது 27), அர்ஜூன் (வயது 23), பிச்சையம்மாளின் தங்கை புவனேஸ்வரி ஆகியோர் சரிமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற அரவிந்த் பலனின்றி இறந்தது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிச்சையம்மாள், மணிகண்டன், அர்ஜூன் ஆகிய 3 பேரை கடந்த 17-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பூசாரி தெருவை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி  புவனேஸ்வரியை (வயது28) தேடி வந்த நிலையில், நேற்று இரவு காந்திமார்க்கெட் சூளைக்கரை மாரியம்மன் கோவில் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News