திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-27 10:16 GMT

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை முழுமையாக ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்திட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் உள்ள பல்நோக்கு சமூகப்பணி மையக் கட்டிடத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ரவி தலைமை வகித்தார்.மாநிலப் பொருளாளர் முருக செல்வராசன் முன்னிலை வகித்தார்.தலைமை நிலையச் செயலாளர் அறிவுடைநம்பி, திருச்சி மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.

மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகநாதன்  தீர்மானங்களை முன்மொழிந்து பேசியதாவது:-

புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை முழுமையாக ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து விடுப்பூதியம் பெறும் உரிமையை தமிழ்நாட்டின் ஆசிரியர்,அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.

மாணாக்கர்களின் கல்வி நலன் கருதி காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் ,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ,நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலியிடங்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்பிட வேண்டும்.பணிமூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி பட்டதாரி ஆசிரியர்,தமிழ் ஆசிரியர்,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்,நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர் காலியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும்.பொதுப்பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.மாநிலத்தின் கல்வி உரிமை,மாநிலத்தின் சுயாட்சி உரிமை பாதுகாக்கப்படல் வேண்டும்.

தமிழ்நாடு பள்ளி ஆசிரியர் பணிப்பாதுகாப்பு சட்டம் விரைந்து இயற்றப்பட்டு அரசுப்பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.அரசுப் பள்ளிகளின் பராம்பரியம்,பெருமை,சிறப்பு பேணப்பட வேண்டும்.

எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டம் தொடக்க கப்பள்ளிகளில் சிறப்பாக நடக்கும் வகையில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10 என்று மேம்படுத்தி அறிவிக்கப்பட வேண்டும்.

எண்ணும் எழுத்தும் கல்வித் திடத்தின் சாதக பாதகங்களை ஆராய்வதற்காக ஒரு குழு அமைத்து இத்திட்டத்தின் கற்றல் அடைவுகளை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினைபெரிதும் வரவேற்கிறோம். அதே நேரத்தில் நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்,அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும்மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டாம்.

தமிழ்நாட்டின் ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளர்களை மட்டும் தமிழ்நாட்டின் உயர் அலுவலர்கள் அழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் இயக்க பொன்விழா ஆண்டை( 1973-2023 )சிறப்பிக்கும் பொருட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,விளையாட்டுத்துறை அமைச்சர்,நிதி அமைச்சர் ஆகியோரை அழைத்து தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கும் வகையில் எதிர்வரும் அக்டோபர் 2023 ல் புதுக்கோட்டையில் 3 நாட்கள் இயக்க பொன்விழா மாநில மாநாடு நடத்துவது என மாநில மாநாடு நடத்திடுவது என மாநில செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

முடிவில் மாநில வெளியீட்டுச் செயலாளர் ஜெக.மணிவாசகம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News