சிறுவன் இறந்த வழக்கில் நீச்சல் குள உரிமையாளர், பயிற்சியாளருக்கு சிறை
திருச்சியில் சிறுவன் நீரில் மூழ்கி இறந்த வழக்கில் நீச்சல் குள உரிமையாளர், பயிற்சியாளருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சி நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி இறந்த வழக்கில் நீச்சல் குள உரிமையாளர் மற்றும் பயிற்சியாளருக்கு தலா இரண்டு வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சி வயலூர் சாலை சீனிவாசன் நகர் பகுதியில் ஒரு தனியார் நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தின் உரிமையாளர் சிவ பாலகுமார் (வயது 46 ),பயிற்சியாளர் கணேச லிங்கம் (வயது 56 ).இந்த நீச்சல் குளத்தில் கடந்த 24 -4 -2017 அன்று காந்தி மார்க்கெட் பகுதி மகாலட்சுமி நகர், தனரத்தினம் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மகன் சையத் அபுதாகிர் (வயது 12 )தனது நண்பர்களுடன் நீச்சல் பயிற்சி செய்து கொண்டிருந்தான்.
அப்போது சிறுவன் சையத் அபுதாகிர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இது பற்றி சையத் அபுதாகீரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நீச்சல் குளத்தின் ஆழம் மற்றும் அதில் குளிக்கும் சிறுவர்களுக்கு சரியான எச்சரிக்கை செய்யாதது போன்றவற்றிற்காக சிறுவனின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக கூறி சிவபாலக்குமார் மற்றும் கணேச லிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சந்திரா குற்றம் சாட்டப்பட்ட சிவ பாலகுமார் மற்றும் கணேசலிங்கம் ஆகிய இருவருக்கும் தலா இரண்டு வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் தலா ஐந்தாயிரம் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு வருடம் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறிய நீதிபதி மீனா சந்திரா பாதிக்கப்பட்ட சையது அபுதாகீர் குடும்பத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ். ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.