திருச்சியில் காரம் தயாரிக்கும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை
திருச்சியில் கார வகை தயாரிக்கும் ஸ்வீட் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் ஸ்டாலின் வசந்தன், பொன்ராஜ், சண்முகசுந்தரம், மகாதேவன், ஜஸ்டின், வடிவேல் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் திருச்சி நகரில் உள்ள கார வகைகள் தயாரிக்கும் 18 கடைகளில் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது 15 கடைகளில் அவர்கள் தயாரித்த காரவகைகள் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது. அவற்றை கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் கொடுத்து அவற்றை சரி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
கார வகைகள் தயாரிக்கும் கடைகள் மற்றும் நிறுவனத்தினர் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் அவற்றை வெளியே விற்க கூடாது. அப்படி விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.