பனை விதை மரங்கள் நடவு செய்த திருச்சி பிஷப் ஹிபர் கல்லூரி மாணவர்கள்

திருச்சி பிஷப் ஹிபர் கல்லூரி மாணவர்கள்பனை விதை மரங்கள் நடவு செய்தனர்.

Update: 2024-08-11 13:15 GMT

திருச்சி அருகே கிராமத்தில் சமூக பணிகள் செய்த பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் அருகிலுள்ள மேக்குடி கிராமத்தில் தண்ணீர் அமைப்பு நிர்வாகிகள் சூழலியல் பாதுகாப்பு முகாமில் பனை விதைப்பு நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தண்ணீர் அமைப்பின் செயலர் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் கி. சதீஷ் குமார் பங்கேற்றார்.

தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் திரு. கே.சி. நீலமேகம் தலைமை வகித்தார். மேக்குடி பஞ்சாயத்து தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார்.


நிகழ்வில் மரங்களும் மண்வளமும் - சமூக நலமும் என்ற தலைப்பில் கி.சதீஷ் குமார் சிறப்புரையாற்றினார். அவர்தம் சிறப்புரையில் தொல்காப்பியர் குறிப்பிட்டபடி நிலமும் பொழுதும் நம் முதற்பொருள். திணைகள் தோறும் நிலவியல் உற்பத்தி பொருளியல் இயற்கை மரங்கள் அடிப்படையில் காரணப் பெயராகவே ஊர்கள் பெயரை தமிழர்கள் சூட்டினார்கள். மரம் என்பது நிலத்தின் இனத்தின் வாழ்வியலின் பண்பாட்டின் குறியீடு. அவற்றில் குறிப்பாக ஊர்தோறும் ஆலம், அரசு, இச்சி பனை மரங்களை நம் முன்னோர்கள் காலந்தோறும் விதைத்து நட்டு பராமரித்து பாதுகாத்து குலக்குறியீடாக போற்றி வந்தனர்.

அந்த அடிப்படையில் தான் இச்சி வனங்கள் நிறைந்த இந்தப் பகுதி நிலவியல் அடிப்படையில் பின்னாளில் திரு இச்சி திருச்சி என பெயர் பெற்றது. எனவே மண்வளம் நிலத்தடி நீர்வளம் குலவளம் குளவளம் காத்திட மரங்களை நட்டு வைப்பதோடு மட்டுமன்றி பராமரித்து போற்றிப் பாதுகாத்தால் நம் தலைமுறைகளை நின்று தாய் போல காத்திடும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து மேக்குடி ஏரிக்கரையில் 300 பனை விதைகள் விதைக்கப்பட்டது. சமூகப்பணித் துறை ஒருங்கிணைத்தனர்.

துறைத்தலைவர் முனைவர் கார்டர் பிரேம்ராஜ், திருமதி ரீனா ரெபல்லோ, முனைவர் உதவி பேராசிரியர் கிப்ட்சன் மற்றும் அபிநயா ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் சாரா கிரேஸ், டேனியல் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

Tags:    

Similar News