திருச்சியில் திருட்டு காரில் சென்னைக்கு சவாரி ஏற்றியவர் கைது
திருச்சியில் திருட்டு காரில் சென்னைக்கு பயணிகளை சவாரி ஏற்றிக்கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சுதாகர் (வயது 40) என்பவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே காரை நிறுத்திக் கொண்டு சென்னைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த மத்திய பஸ் நிலைய வாடகை கார் ஓட்டுனர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த கண்டோன்மெண்ட் போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.
இந்த நிலையில் சுதாகர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் வைத்து இருந்த கார் திருட்டு கார் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் வேளாங்கண்ணியில் கார் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது காரை திருடி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சுதாகரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.