பெரியார், அண்ணா பிறந்த நாளையொட்டி திருச்சியில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி

பெரியார், அண்ணா பிறந்த நாளையொட்டி திருச்சியில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளது.

Update: 2023-10-10 17:24 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஐஏஎஸ்.

அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி 17.10.2023 ஆம் நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு வழங்கப்பட இருப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார்,  அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அண்ணா பிறந்தநாளையொட்டி 17.10.2023ஆம் நாளன்று (செவ்வாய் கிழமை) முற்பகல் 10.00 மணிக்கும், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி அதே நாளன்று பிற்பகல் 2.00 மணிக்கும் வாலாயமான விதிமுறைகளைப் பின்பற்றி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையேயான பேச்சுப் போட்டிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இ.ஆர் மேனிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நிகழாண்டில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 17.10.2023 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப் போட்டிக்கு 1) காஞ்சித் தலைவன், 2) அண்ணாவும் பெரியாரும், 3)தமிழும் அண்ணாவும், 4) எழுத்தாளராக அண்ணா,5) தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டி நடத்தப்படும். தந்தை பெரியாரின்பிறந்தநாளையொட்டி 17.10.2023 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள பள்ளி மாணவா;களிடையேயான பேச்சுப்போட்டிக்கு 1)வெண்தாடி வேந்தர் 2)வைக்கம்வீரர் 3)பகுத்தறிவுபகலவன் 4)பெரியாரின் சமூகச் சீர்திருத்தங்கள் ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டி நடத்தப்படும்.

மேலும், பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

மேற்காண் பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப்பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News