திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் மற்றும்வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.;
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 ஆண் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி, மறைத்து வைத்து எடுத்து வந்த அமெரிக்க டாலர், சவுதி ரியால் மற்றும் யுஏஇ திர்காம்ஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு 37 லட்சத்து 93 ஆயிரத்து 845 ஆகும்.இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து வந்த 3 பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போன்று இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று நவீன ஸ்கேனிங் கருவி மூலம் சல்லடை போட்டு சோதனை செய்தனர்.
அப்போது அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.39.50 லட்சம் மதிப்பிலான 652 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த பயணியை மருத்துவ பரிசோதனைக்காக விமான நிலைய பகுதியில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விரட்டி சென்று பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.