இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா படகுடன் பறிமுதல்-5 பேர் கைது
நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா படகுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த தனிப்படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று 18-ந்தேதி காலை 7.00 மணியளவில், நாகப்பட்டினம் நகர காவல் சரகம், கீச்சாங்குப்பம் பழைய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சோதனையிட்டபோது அந்த படகில் 400 கிலோ கஞ்சா பொட்டலங்கள் (ரூ. 1 கோடி மதிப்பு) 20.02.22 அன்று இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு பதுக்கி வைத்திருந்ததை தனிப்படையினர் கைப்பற்றி, 5 பேரை கைது செய்தனர்.
மேலும் 1 படகு (மதிப்பு ரூ.50 இலட்சம்) 4 இருசக்கர வாகனம், (மதிப்பு ரூ.2 இலட்சம்) மற்றும் செல்போன்கள் (மொத்த மதிப்பு ரூ.1,52,00,000) கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து, கஞ்சா குற்றவாளிகளை விரைந்து கைது செய்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரை பாராட்டி, பாராட்டு சான்றிதழை வழங்கினார். மேலும், தனிப்படையினருக்கு பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.