திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி மேயர் அன்பழகன் பரிசு
திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பரிசு வழங்கினார்.;
மத்திய அரசின் நகர்ப்புற வீட்டுவசதி துறை சீர்மிகு நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்திய அளவில் 113 நகரங்களை தேர்ந்தெடுத்து அந்த நகரங்களில் சாலை வடிவமைப்பு பற்றிய ஒரு திறன் போட்டியை அந்தந்த நகராட்சி நிர்வாகங்கள் நடத்துவதற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி திருச்சி மாநகராட்சியில் கரூர் பைபாஸ் சாலை மற்றும் கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள லாசன்ஸ் சாலை ஆகிய இரு சாலைகளும் தேர்வு செய்யப்பட்டு இந்த சாலைகளில் நடைபயிற்சி மற்றும் பாதுகாப்பு உள்ளூர் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஒரு வடிவமைப்புக்கான போட்டியை அறிவித்தது.
இந்த போட்டியில் ஏராளமானவர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை படங்களுடன் வடிவமைத்து அனுப்பியிருந்தனர். இந்த திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மேயர் மு.அன்பழகன் கலந்து கொண்டு சாலை வடிவமைப்பு திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும்,மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், துணை மேயர் திவ்யா, நகர பொருளாளர் அமுதவல்லி, நிர்வாக பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.