பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார்
பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.;
திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக பேராசிரியை கலெக்டரிடம் புகார் அளித்து உள்ளார்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் 27 வயது பெண். தற்போது இவர் திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த பெண் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னையைச் சேர்ந்த நான் திருச்சியில் தங்கி எம்.எஸ்சி. கணிதம் படித்து வருகின்றேன். மேலும் இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருகிறேன். இந்தநிலையில் எனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் எனது செல்போனை அந்த காவல் நிலைய அதிகாரி விசாரணைக்காக வாங்கி வைத்துக்கொண்டார். இதற்கிடையே அந்த முதல் தகவல் அறிக்கையில் சில தவறான தகவல்கள் இடம்பெற்று இருந்ததால அதனை திருத்தம் செய்வதற்காக மீண்டும் துணை போலீஸ் கமிஷனரை சந்திக்க கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றேன்.
அப்போது திருச்சி மாநகரில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்து அவரும் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் வந்து தொல்லை கொடுத்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி உட்பட சில போலீசாரும் உதவியாக இருக்கின்றனர். என்னை தாக்கி தவறாக வீடியோவும் எடுத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
பெண் பேராசிரியை கொடுத்த இந்த புகார் பிரச்சினை திருச்சி மாநகர காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகாருக்கு ஆளான போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை தற்போது நடந்து வருகிறது. அவர் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.