'பள்ளி மாணவிகளை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை'- ஐ.ஜி. பாலகிருஷ்ணன்
பள்ளி மாணவிகளை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்து இருப்பதாவது:-
காவல் துறையினரின் குறைதீர் கூட்டம் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் வரும் 16-ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள 500 பேர் மனு அளித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம் நடந்துள்ளது. இதில் மேலும் ஒரு சில டைரி சிக்கியது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அறிக்கை மற்றும் பள்ளி ஆசிரியர் தற்கொலை குறித்த போலீசாரின் விசாரணை அறிக்கை வந்த பின்னர் இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் குறித்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக பள்ளி மாணவிகளிடையே கொரோனா அச்சம் மற்றும் செல்போனால் பெரும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனை களைவதற்காக பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர கழகத்தினரால் நடத்தப்படும் கலந்தாய்வு கூட்டத்தில் காவல் துறையினரும் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மண்டலத்தில் உள்ள பெண்கள் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக யாரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.