யூடியுப் பார்த்து திருச்சியில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

உடல்பருமனால் கேலிக்கு ஆளானதால் யூடியுப் பார்த்து திருச்சியில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2022-01-26 14:19 GMT
திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையம் (பைல் படம்).

திருச்சியில் உடல்பருமனால் கேலிக்கு ஆளானதால் பள்ளி மாணவி யூடியுப் பார்த்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

திருச்சி கண்டோன்மெண்ட் அலெக்சாண்ட்ரியா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சர்மிளா. இவர் திருச்சியில் உள்ள தேசிய மயமாக்கப் பட்ட வங்கி ஒன்றில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் மணி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இவர்களின் மகள் சிவானி (வயது 13). இவர் திருச்சி கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தந்தை பிரிந்து சென்றதால், சிவானி தனது தாயாருடன் வசித்துவந்தார். இவர்களுடன் சர்மிளாவின் பெற்றோரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சிவானியின் உடல்பருமனாக இருந்தது. இதனால் அவதியடைந்த அவர், உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து வந்துள்ளார்.

இதற்காக அவர் வீட்டில் தனி அறையில் தங்கியுள்ளார். அத்துடன் யூடியுப் பார்த்து பலஉணவு கட்டுப்பாடுகளையும் அவர் கடைபிடித்து வந்துள்ளார். ஆனால் உடல்பருமன் குறையவில்லை.

அது மட்டுமின்றி, அவர் உடல்பருமன் காரணமாக பலருடைய கிண்டல் கேலிக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி சிவானி மனமுடைந்து காணப்பட்டார். இதுபற்றி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சர்மிளா வங்கிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மதியம் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்ற சிவானி மாலை 4 மணி வரை ஆன்-லைன் வகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் உடல்பருமனை எண்ணி வருந்திய மாணவி, வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். இதற்காக அவர், தற்கொலை செய்வது எப்படி என்று யூடியுப்பில் தேடிப்பார்த்துள்ளார். பின்னர், தனது அறையில் இருந்த அலமாரியின் கைப்பிடியில், துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை நீண்டநேரம் ஆகியும், சிவானி காபி குடிக்க வராததால், அவருடைய அறைக்கதவை பாட்டி நீண்ட நேரம் தட்டியுள்ளார்.

ஆனால் சிவானி கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது தான் சிவானி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி தகவலறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சிவானியின் தாயார் சர்மிளா கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட்போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்து கொண்டது உடல்பருமன் காரணம் மட்டுமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யூடியுப் பார்த்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக இன்றைய இளைய தலைமுறையினர் யூடியுப்பை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதைவிட இது போன்ற காரணங்களுக்காக தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News