சமயபுரம், ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம்: திருச்சியில் 2 நாள் தொடர் விடுமுறை
சமயபுரம், ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் 2 நாள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.;
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு தேரோட்ட விழாக்களால் திருச்சி மாவட்ட மக்களுக்கு இரண்டு நாள் உள்ளூர் விடுமுறை கிடைத்தது.
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்ட விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபாடு செய்தனர். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பிறப்பித்து இருந்தார். உள்ளூர் விடுமுறை காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் 108 வைணவ தலங்களில் முதன்மையான திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை புதன்கிழமையும் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்ட மக்களுக்கு குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள் தொடர் ஒருமுறை கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இதனால் அவர்கள் கோவில், குளங்கள் என சுற்ற தொடங்கி விட்டார்கள்
புராண ரீதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கை சமயபுரம் மாரியம்மன் என கருதப்படுகிறார். இதனை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் அண்ணன் ரங்கநாதன் தங்கை மாரியம்மனை கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வரவழைத்து சீர் செய்வது வழக்கம். அந்த வகையில் அண்ணன் தங்கையாக கருதப்படும் இரண்டு கோவில்களிலும் திருவிழாக்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் அடுத்தடுத்து நடைபெற்று இருப்பது மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி தொடர்ந்து இரண்டு விழாக்களும் வரும் என திருச்சி மாவட்ட மூத்த குடிமக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.