சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நாளை மறுநாள் கொடியேற்றம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நாளை மறுநாள் கொடியேற்றம் நடக்கிறது.;
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்மனை தரிசிப்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் முக்கியமானதாகும்.
இந்த ஆண்டுக்கான சித்திரைத் தேர்த்திருவிழா நாளை மறுநாள் (10-ம்தேதி) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை மறுநாள் காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருள்கிறார். அதனை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.
இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருவார். மேலும் தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் ,ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் 11 .30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருள்கிறார். அதனைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20ஆம் தேதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 21ஆம் தேதி அம்மன் பல்லக்கில் புறப்படுகிறார். 22ஆம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் உற்சவர் தீபாராதனையும் நடைபெறுகிறது. 26-ந் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.
விழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.