திருச்சியில் காய்கறி விற்பனை வாகனங்கள் வாங்க ரூ.2 லட்சம் நிதியுதவி

திருச்சி மாநகராட்சியில் காய்கறிகளை நேரடியாக வீடுகளில் விற்கும் திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2022-03-08 04:30 GMT

பைல் படம்.

கொரோனா ஊரடங்கு காலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக வீட்டிற்கே விற்பனை செய்தது மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இதன் அடுத்த கட்டமாக இச்சேவையை விரிவுபடுத்தவும், கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வணிகத்தினை ஊக்குவிக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடு தோறும் வழங்கிட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில் நடமாடும் வாகனங்கள் வாங்குவதற்காக 40 சதவீதம் மானியம் அல்லது ரூ.2 லட்சம் நிதி உதவி அரசு மூலம் வழங்கப்படும். திருச்சி மாநகராட்சியில் 6 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு விற்பனை விலை அருகிலுள்ள உழவர்சந்தை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் வாங்குவதற்கான மானியம் பெற பயனாளிகள் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இத்திட்டம் மூலம் நடமாடும் வாகனங்களுக்கான மானியம் பெற வரையறுக்கப்பட்ட தகுதிகள்: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 21 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் விவசாயிகள், சொந்த அல்லது குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நில உடமைச் சான்று, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகளுக்கு ஒரு வாகனத்திற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.

மேற்காணும் தகுதியுடைய ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை மாவட்ட துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), மன்னார்புரம், திருச்சி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மார்ச் 11-ந் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கே.கே.நகர், அண்ணாநகர் உழவர் சந்தை அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொண்டும் பயனடையலாம். இந்த தகவல் மாநகராட்சி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News