துபாய் ஓட்டலில் ரூ.1.27 கோடி மோசடி: திருச்சி நபர் மீது போலீசார் வழக்கு
துபாய் ஓட்டலில் பணியாற்றியபோது ரூ.1.27 கோடி மோசடி செய்த திருச்சியை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் துபாயில் உள்ள ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் திருச்சியை சேர்ந்த ரவி (வயது 52) என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு ரவி வந்து விட்டார். இந்தநிலையில், ஹோட்டலின் வரவு-செலவு கணக்குகளை ராஜேந்திரன் பார்த்துள்ளார். அப்போது, ரவி ரூ.1 கோடியே 27 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
அந்த பணத்தை திருப்பி தருமாறு ரவியிடம், ராஜேந்திரன் கேட்டுள்ளார். அதற்கு பணத்தை தர முடியாது என ரவி கூறியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் ரவி தனது ஆதரவாளரான செங்குறிச்சியை சேர்ந்த கருப்பையாவுடன் சேர்ந்து ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் ராஜேந்திரன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.