திருச்சி ரவுடிகளுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை
திருச்சியில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர் நாராயணன் என்பவர் கடந்த 28-ந்தேதி கடையில் பணியில் இருந்த போது முகேஷ், ரகுபதி மற்றும் அவர்களுடன் வந்த இருவர் அந்த கடையில் மதுபாட்டில்கள் வாங்கிகொண்டு பணம் கொடுக்க மறுத்தும், பணம்கேட்ட கடை ஊழியர் நாராயணனை அசிங்கமாக திட்டியும், கத்தியால் வலது கையில் கிழித்து காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் அன்று மாலை திருவானைக்காவல் பஸ் நிறுத்தம் அருகில் பானிபூரி விற்பனை செய்துவரும் ஆனந்தன் என்பவரிடம் பானிபூரிவாங்கியதற்காக பணம் கேட்டு தர மறுத்து, ஆனந்தனைகத்தியால் இடது கையில் கிழித்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து காயம் பட்ட நாராயணன் மற்றும் ஆனந்தன் ஆகியோர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசில் இருவரும் தனி, தனியாக கொடுத்த புகாரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கினை தனிப்படை மற்றும் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகேஸ் மற்றும் ஜீவா, நாகராஜ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றகாவலுக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், ஜீவா மீது கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், நாகராஜ் என்பவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும் நிலுவையில் இருந்து வருவது தெரிய வந்தது. மேலும் தலைமறைவாக உள்ள ரகுபதிஎன்பவரை தேடி வருகின்றனர்.
திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீதுசட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கர்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.