முதியோர் நல வாரியம் அமைக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
முதியோர் நல வாரியம் அமைக்கவேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.அருள்ஜோஸ் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் வீடு தேடி மருத்துவ திட்டம் மூலம் சிறியவர் முதல் முதியவர் வரை பலரும் பலனடைய செய்து கொள்வதற்காக தமிழக அரசிற்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் பாராட்டு தெரிவிக்கிறது, முதியோர்களின் மனநலம், உடல்நலம், வாழ்வாதாரம் மேம்பட முதியோர் நல வாரியத்தை தமிழக அரசு புதிதாக தொடங்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வது.
திருச்சி ஜங்ஷன் உயர்மட்ட மேம்பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வது, இனி வரும் மூன்று மாதங்கள் பண்டிகை காலமாதலால் தற்போதைய அகவிலைப்படி 28 சதவீத தொகையை உடனே வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்வது,
மருத்துவ காப்பீட்டு திட்டம் 2018-ன்படி ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தில் இருந்து மாதம் ரூ. 350 பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது ஓய்வூதியரி டமிருந்து முழுத்தொகையும் கட்டாயப்படுத்தி பெற்றுக்கொள்கின்றனர்.
அரசிடம் போட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணமில்லா சிகிச்சை அளிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வது. மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மாவட்ட இணை செயலாளர் ஆஜிரா பீவி நன்றி கூறினார்.