திருச்சி மேயர் அன்பழகனுடன் குடியிருப்போர் நல சங்கத்தினர் சந்திப்பு
திருச்சி மேயர் அன்பழகனுடன் ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.;
திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகனை இன்று திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து அவரது பணி சிறக்க வாழ்த்து கூறினார்கள்.
இந்த சந்திப்பின்போது மாநகராட்சி 61 வது வார்டு ஜே.கே.நகர் சுற்று வட்டார பகுதிகளின் வடிகாலாக இருப்பதால் கொட்டப்பட்டு குளம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே கொட்டப்பட்டு குளத்தை நன்கு ஆழப்படுத்தி காங்கிரீட் சுற்று சுவர் எழுப்பினால் ஜே. கே.நகருக்குள் தண்ணீர் வராமல் பாதுகாக்கப்படும். குளத்து நீர் மாவடிகுளம் செல்ல வசதி செய்துதர வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை வேலைகள் ஆமை வேகத்தில் நடப்பதை துரிதப் படுத்த வேண்டும், முகம்மதுநகர்,திருமுருகன்நகர் ஜே.கே.நகரின் அனைத்து பகுதிகள்,லூர்து நகர், பகுதிகளுக்கும் முறையான மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டும், புதிய ரோடுகளை அமைத்து தரவேண்டும், தெரு விளக்குகள் இல்லாத கம்பங்களில்,புதிதாக வயர் பொருத்தி தெருவிளக்குகள் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கையை கனிவுடன் கேட்ட மேயர் அன்பழகன் உங்கள் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்கிறேன். வடிகால் வசதி உள்பட அனைத்து தேவைகளையும் நமது அரசு நிறைவேற்றும். நம்பிக்கையுடன் செல்லுங்கள் என கூறி நன்றி தெரிவித்தார்.
நல சங்கத்தின் தலைவர் ஆசைத்தம்பி, செயலாளர் ஆலயமணி, மற்றும் ஜமாத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.