தமிழகத்தில் துணை நகரங்கள் அமைக்க முதல் அமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை

தமிழகத்தில் துணை நகரங்கள் அமைக்க முதல் அமைச்சர் ஸ்டாலினிடம் இந்திய தொழிலாளர் விவசாய கூட்டமைப்பு செயலாளர் கோரிக்கை மனு அளித்தார்.

Update: 2023-07-27 15:10 GMT

முதல் அமைச்சர் ஸ்டாலின் காரில் இருந்த போது அவரிடம் இந்திய தொழிலாளர் விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி மனு கொடுத்தார்.

தமிழகத்தில் துணை நகரங்களை உருவாக்கி ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடுகள் ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருச்சி வந்தார். நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி ராம்ஜி நகர் மில்  காலனியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் 15 மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்ட முகாமில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணியாற்றுதல் தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.

நேற்று இரவு திருச்சி சுற்றுலா மளிகையில் முதல்வர்  தங்கினார். இந்நிலையில் இன்று காலை திருச்சி தாயனூரில் உள்ள கேர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மூன்று நாள்  வேளாண் சங்கமம் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் சுற்றுலா மாளிகையில் இருந்து கண்காட்சி நடைபெறும் அரங்கிற்கு செல்லும் வழியில் இந்திய தொழிலாளர் விவசாயிகள் கூட்டமைப்பின்  (எச். கே. எம். பி) மாநில செயலாளராக ராபர்ட் கிறிஸ்டி முதலமைச்சரை சந்தித்து ஒரு மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தமிழகத்தில் தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதனை நினைவு கூறும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பெரு நகரங்களுக்கு அருகிலும் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு புரம் அமைக்க வேண்டும். நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பெரும்பாலும் தங்களது வருவாயில் சரிபாதியை வீட்டு வாடகைக்கு செலுத்த வேண்டிய வரிய நிலையில் உள்ளனர்.

அவர்களின் வறுமையை போக்குவதற்காக நகரங்களுக்கு அருகிலேயே துணை நகரங்களை உருவாக்கி அதில் அரசு சார்பில் வீடு கட்டி அந்த வீடுகளை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால் அவர்களது வாழ்வில் விடியல் ஏற்படும். இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால் மற்ற மாநிலங்களும் இதை முன்மாதிரியாக எடுத்து செயல்பட வழிவகுக்கும். ஆதலால் முதல்வர் அவர்கள் இதில் கவனம் செலுத்தி ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

Tags:    

Similar News