திருச்சி என்.எஸ்.பி.சாலையை வியாபார ஸ்தலமாக அறிவிக்க கோரிக்கை
திருச்சி என்.எஸ்.பி.சாலையை வியாபார ஸ்தலமாக அறிவிக்க வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.;
கோரிக்கை மனு அளிக்க வந்த வியாபாரிகள்.
திருச்சி என்எஸ்பி சாலையை வியாபார ஸ்தலமாக அறிவிக்க கோரி வியாபாரிகள் மனு அளித்து உள்ளனர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்க மாவட்ட தலைவர் கபீர் அகமது தலைமையில், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ராஜா, செயலாளர் அஷ்ரப் அலி, பொருளாளர் காஜா மைதீன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அன்சாரி, மாவட்ட துணை தலைவர் சையது முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் எங்களுடைய சங்கத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் எங்கள் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், கல்லூரி சாலை, என். எஸ். பி. ரோடு, தெப்பக்குளம் ஆர்ச், பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு காமராஜர் வளைவு அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு வியாபாரம் செய்து வருகின்றனர் . இந்த நிலையில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க அரசு ஏற்பாடு செய்தது. இதுதொடர்பாக குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் எங்கள் அமைப்பு நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்காத காரணத்தால் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தோம். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது. எனவே தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை தாமதம் இன்றி வழங்க வேண்டும். வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்யும் என். எஸ்.பி. ரோடு, சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி, தெப்பக்குளம் ஆர்ச், காமராஜர் வளைவுஉள்ளிட்ட பகுதிகளை வியாபார ஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.