திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி துவக்கம்
திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உத்தரவின்படி துவங்கியது.
காவிரியின் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்று உய்ய கொண்டான். கரிகாற்சோழனால் வெட்டப்பட்ட இந்த வாய்க்கால் திருச்சி நகருக்குள் மட்டும் சுமார் 11 கி. மீ.நீளத்திற்கு பாய்ந்தோடுகிறது. திருச்சி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன வாய்க்காலாகவும் இந்த வாய்க்கால் மன்னர்கள் காலத்தில் இருந்து பயன்பட்டு வந்தது. காலப்போக்கில் ஆக்கிரமிப்பு ,கழிவு நீர் கலப்பு போன்ற காரணங்களால் தற்போது கழிவு நீர் வாய்க்கால் போல் காட்சி அளிக்கிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த வாய்க்கால் ரூ.11 கோடி செலவில் தூர் வாரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இந்த வாய்க்கால் இன்னும் அப்படியே தான் உள்ளது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உய்யக்கொண்டான் கால்வாயில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் ஆகாய தாமரை செடிகளை அகற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட துரைசாமிபுரம் பகுதியில் அதற்கான முதற்கட்ட பணியானது துவங்கப்பட்டது.
இந்த பணியை துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மேலும் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வரகனேரி எடத்தெரு மற்றும் பாலக்கரை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆகாய தாமரையை அகற்றும் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இனிகோ இருதயராஜ் கேட்டுக்கொண்டார்.
இனிகோ இருதயராஜுடன் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா மற்றும் மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா , மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பகுதி திமுக செயலாளர்,வட்டக் கழக செயலாளர்கள் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.