திருச்சியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நிவாரண உதவி
திருச்சியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு பெண்ணிற்கு நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 461 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரியமங்கலம் கிராமம், மேற்கு ராஜப்பா நகரைச் சேர்ந்த ரம்ஜான் பீமா என்பவரின் கணவர் ஜாகீர் உசேன் உய்யகொண்டான் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி ரம்ஜான் பீமாவிடம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினையும், அந்தநல்லூர் காந்திபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மஞ்சுளா மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதால் அவரது மகன் சக்தி அபிஷேக் கல்லூரி தேர்வு கட்டண நிதியுதவியாக மாவட்ட நலப்பணி நிதிக்குழுவின் நிதியிலிருந்து ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையினையும் மற்றும் சக்கர நாற்காலியினையும், ஜம்மு காஷ்மீரில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் குண்டு வெடித்து காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர்நல இயக்கத்திலிருந்து பங்கிராஜ் என்பவருக்கு வைப்புத் தொகையாக ரூ. 50 ஆயிரம் தொகுப்பு நிதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றத்தக்க வகையிலான பத்திரத்தினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அம்பிகாபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.சந்திரமோகன், துணை இயக்குனர் லெப்.கமாண்டர் சங்கீதா(ஓய்வு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.