ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 ரவுடிகள் சம்மதம்
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 ரவுடிகள் கோர்ட்டில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.;
கொலை செய்யப்பட்ட கே.என். ராமஜெயம்.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 ரவுடிகள் கோர்ட்டில் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க. முதன்மை செயலாளரும்,தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். திருச்சி கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் பொன்னி டெல்டா அருகே கிடந்த ராம ஜெயம் உடலை போலீசார் கைப்பற்றினர். ஸ்ரீரங்கம் போலீசார் முதலில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் துப்பு துலங்கவில்லை.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் போலீசார் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொலைக்கான காரணமும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் ராமஜெயத்தின் குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசின் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. எஸ். பி. ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 13 ரவுடிகளை பிடித்து பல நாட்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாணை நடத்தினர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் 13 பேரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில்(எண்6) கடந்த மாதம் ஆஜர்படுத்தினர். அப்போது அதற்கு மாஜிஸ்திரேட் சிவகுமார் அனுமதி வழங்கவில்லை.
மேலும் இந்த வழக்கில் ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு முன்பாக ராமஜெயத்தின் மனைவி லதா மற்றும் அவரது உறவினர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும், அவர்கள் ஏற்கனவே முன்னுக்கு பின் முரணான வாக்குமூலம் அளித்து உள்ளனர் என ரவுடிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் இன்று ரவுடிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று சத்யராஜ், லெட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேர் மட்டுமே உண்மை கண்டறியும் சோதனைக்கு தாங்கள் தயார் என ஒப்புக்கொண்டனர். தென்கோவன் (எ) சண்முகம் சம்மதம் தெரிவிக்கவில்லை.
மேலும் மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17ம் தேதி விசாரணையின் போது நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளி வைத்தார்.