திருச்சியில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2024-07-06 12:18 GMT

திருச்சியில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜான்சி ராணி மகளிர் மன்ற தலைவி ஹேமலதா துவக்க உரையாற்றினார். வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் முன்னிலை வகித்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மழைநீர் சேகரிப்பு குறித்து பேசியதாவது:-

மழைநீரை வீணாக்காமல், அது வெளியேறாமல் தடுப்பதாகும்.மழைநீர் சேகரிப்பு எளிதானது ஆகும். பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்கிறது. இச்சூழலில் மழைநீர் சேகரிப்பு காலத்தின் தேவையாக மாறியுள்ளது. இது அனைத்து பகுதி மக்களும் கடைபிடிக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தற்போது நிலத்தடி நீரையே தங்கள் பயன்பாட்டிற்கு நம்பியுள்ளனர். பல வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட நீர்மூழ்கிக் குழாய்கள் உள்ளன. அதிகப்படியான பயன்பாடு, காடுகள் அழிப்பு, நகரமயமாக்கல் மற்றும் பலவற்றால் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.எனவே, மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரின் அளவைப் பராமரிக்க முடியும்.

குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்துக் கொள்வதன் மூலம் பெரிய செலவுகள் இல்லாமல் நிலத்தடி நீரை தக்க வைத்துக்கொள்ள இயலும்.

மாடியில் சேரும் மழை நீர் குழாய்கள் மூலம் ஒரே இடத்துக்கு வருவதுபோல் ஒரே குழாய் அல்லது ஒவ்வொரு குழாயையும் இணைப்பதுபோல அமைத்த வடிகால் அமைப்பு, மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்கு சென்று சேர வேண்டும்.மழை நீர் சேகரிப்புத் தொட்டி என்பது சுமார் 3 அடி விட்டம், 5 முதல்10 அடி ஆழம் கொண்டதாகவும், அதில் மணல் ஜல்லிகற்கள் நிரப்பி குழியை மூடிவிடலாம். இம்முறையால் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரானது பூமியில் சேமிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பார்த்திபன், ஸ்வேதா, அபிஷ்வர், பரத் குமார், கணினி அறிவியல் துறை மாணவி சிவஸ்ரீ, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பாடப்பிரிவு மாணவி அக்ஷயா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.சமூக இணைப்பு களப்பணியாக நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News