திருச்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.;
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து உள்ளது.
இதன் காரணமாக ஆங்காங்கே தேங்கியுள்ள மழை நீரை சேகரிப்பதற்காக தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வீடியோ வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம் கிராமங்கள்தோறும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பல காட்சிகளுடன் விளக்கமளித்து பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை எடுத்து விளக்கப்பட உள்ளது. துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்படும்.
இந்த வீடியோ பிரசார வாகனத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது திருச்சி மண்டல குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் நாக ஆனந்த், பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.