‘மரத்தை வெட்டியவர்களுக்கு தண்டனை’ திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
‘மரத்தை வெட்டியவர்களுக்கு தண்டனை’ வழங்கவேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், மரம் வளர்த்தல் மற்றும் அதனை பராமரிப்பற்கான செயல்களிலும் மக்கள் சக்தி இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் சாலை விரிவாக்கம், மழை நீர் வடிகால் போன்ற பணிகளுக்காக நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால், போற்றி பேணி பாதுகாக்கப்பட்டு வரும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாருக்கு, மக்கள் சக்தி இயக்கத்தின் செயலாளர் இளங்கோவன் அனுப்பி உள்ள ஒரு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி 35ஆவது வார்டு செந்தண்ணீர்புரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக வைக்கப்பட்ட 10 வயது புங்கன் மரம் வெட்டப்பட்டு உள்ளது.
நமது ஊரான செந்தண்ணீர்புரம் அழகுபடுத்த மரங்கள் ஒன்றே தீர்வு என கொண்டு கடந்த 20 ஆண்டுகளாய் செந்தண்ணீர்புரம் நுழைவு பகுதியில் (மேற்கு எல்லை முதல்) இருந்து முத்துமணி நகர் வரை(கிழக்கு எல்லைவரை) சாலை ஓரத்தில் யாவருக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் சுமார் 190 மரங்கள் மக்கள் சக்தி இயக்கத்தினால் வளர்த்துள்ளோம்.
இன்றும் அவைகள் நல்ல உயிர்க்காற்றுடன் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வாகனங்களுக்கும் நல்ல நிழலும் தந்து கொண்டிருக்கின்றன.
தற்போது கோவலன் தெரு வடபுறத்தில் இருந்து டீசல் பணிமனை வரை *மழை நீர் வடிகால் கட்டும்போது கூட அந்த மரங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் நன்கு திட்டமிட்டு கட்டியது மிகவும் மகிழ்ச்சியை தந்தது.
ஆனால் நேற்று அந்த வடிகால் ஆரம்பிக்கும் இடத்தில் நன்கு வளர்ந்த 10 வயது புங்கன் மரம் வெட்டப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை தந்தது.
மாநகராட்சி நிர்வாகம் கட்டுமான பணி மரங்களை காப்பாற்ற திட்டமிட்டும் அந்த மரத்தை வெட்டியது மிகவும் கண்டிக்கபட வேண்டியது. இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கண்டிப்பாக மரத்தை வெட்டியவர்களுக்கு தக்க தண்டணை கொடுக்க வேண்டும். மற்ற மரங்களையும் காப்பாற்ற இது போன்ற நடவடிக்கை எடுப்பது தான் ஒரே வழி.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.