கலாஷேத்ரா குற்றவாளிகளுக்கு தண்டனை: மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்
கலாஷேத்ரா குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.;
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் மாநிலத் தலைவர் பத்மாவதி தலைமையில் இன்று திருச்சியில் நடைபெற்றது.
2023 ம் ஆண்டிற்கான உறுப்பினர் பதிவு, கிளை, ஒன்றிய மாநாடுகளை ஏப்ரல் 30 க்குள் முடிப்பது, மாவட்ட மாநாடுகள் குறித்த திட்டமிடல், கோவிட் சர்வேக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம், கலாஷேத்ரா பாலியல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டது.
மாநில செயலாளர் மஞ்சுளா, மாநில துணை தலைவர்கள் சுந்தரவள்ளி, தமயந்தி, ராஜலட்சுமி மாநில துணை செயலாளர்கள் கண்ணகி, டி.பி.லலிதா வளர்மதி உட்பட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கலாஷேத்ரா மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிகள் அனைவரும் தண்டனை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த ஒரு பேராசியர் உட்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மார்ச் 30 அன்று கலாஷேத்ரா மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். தமிழக அரசும், மாநில மகளிர் ஆணையமும் இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட்டு விசாரணை, மற்றும் குற்றவாளிகள் கைது என உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வரவேற்கிறது.
இருப்பினும், திரைகலைஞர் அபிராமி போன்றவர்களை வைத்து பொய் செய்திகளை பரப்புவது, புகார் மனு அளித்த மாணவிகளின் நடத்தை குறித்து தவறான பிரச்சாரம் செய்வது, மாணவிகளை மிரட்டுவது போன்ற கேடுகெட்ட செயல்களை கலாஷேத்ரா நிர்வாகம் தற்போது செய்து வருகிறது. கலாஷேத்ரா நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஒருவாரம் கடந்தும் இன்னும் விசாரணையை துவங்கவில்லை.
எனவே 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து மாநில மகளிர் ஆணையம் பெற்றுள்ள புகார்களின் அடிப்படையில் உரிய மேல்விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் அனைவரும் உரிய தண்டனை பெற மாநில மகளிர் ஆணையமும், தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு அனைத்து இடங்களிலும் உள்புகார் குழுக்கள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். புகார்குழுக்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். மேலும், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டத்தின்படி மாவட்டம் தோறும் உள்ளூர் புகார் குழுக்களையும் அமைக்க வேண்டும். இச்சட்டத்தை முறையாக அமல்படுத்தாத நிறுவனங்களின் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இந்திய மாதர் தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.