பேராசிரியையிடம் சங்கிலி பறித்தவனை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்
கல்லூரிபேராசிரியையிடம் செயின் பறித்த திருடனை சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
பெரம்பலுார் சாரதா மகளிர் கல்லுாரி பேராசிரியையாக பணியாற்றி வருபவர் கனகம்மாள் (வயது 30). இவர் திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த போது என்பீல்டு பைக்கில் வந்த ஒரு வாலிபர், கனகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றுள்ளார்.
இது குறித்து அவர் பெரம்பலுார் போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுக்கவே, ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து கனகம்மாளிடம் விசாரணை நடத்தினர். அப்போது சங்கிலி பறித்தவர் என்பீல்டு பைக்கில் திருச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிய வரவே விசாரணை நடத்திய போலீசார் போலீஸ் மைக் மூலம் அனைத்து காவல் நிலையங்களையும் அலர்ட் செய்தனர்.
இதனை தொடர்ந்து ரோந்து வாகன போலீசார் பைக்கில் சென்று கொண்டிருந்த செயின் பறிப்பு திருடனை அடையாளம் கண்டு விரட்டி பிடிக்க எத்தனித்தனர். ஆனால் அந்த ஆசாமியோ ரோந்து போலீசாருக்கு போக்கு காட்டிக்கொண்ட திருச்சி டோல்கேட் வரை வந்து பிறகு மீண்டும் பெரம்பலூரை நோக்கி பைக்கை ஓட்டி சென்றுள்ளார். இருப்பினும் அசராமல், அவரை சேசிங் செய்த போலீசார் செங்குறிச்சி அருகே மடக்கி பிடித்தனர்.
பின்னர் பெரம்பலுார் காவல் நிலையம் கொண்டு வந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மதினா நகரை சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 26) என்பதும், இவர் சென்னை வேளச்சேரி பகுதியில் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீடு செல்வதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு தென்காசி நோக்கி தனது என்பீல்டு பைக்கில் சென்ற போது வழியில் சிறிய விபத்து ஒன்று ஏற்பட்டது. இதனால் கையில் இருந்த பணம் அனைத்தும் பைக்கை சரிசெய்ய செலவாகி விட்டது. கைச்செலவிற்கு பணம் இல்லை. எனவே கைச்செலவிற்காக செயின் பறித்தேன் என்று அவர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இருப்பினும் குற்றச்செயலில் ஈடுபடுவது இதுதான் முதல் முறையா, அல்லது சென்னை, தென்காசி பகுதிகளில் அவர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.