மோடி வருகையையொட்டி வீட்டுச்சிறையில் திருச்சி விவசாய சங்க தலைவர்
மோடி வருகையையொட்டி திருச்சி விவசாய சங்க தலைவர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.;
வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு.
பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாளை (சனிக்கிழமை) விமானம் மூலம் திருச்சி வருகிறார். இதனையொட்டி திருச்சி நகரில் போலீசார் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், ஸ்ரீரங்கம் மற்றும் அவர் வந்து செல்லும் இடங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சிக்கு வரும் பிரதமருக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் அல்லது உண்ணாவிரதம் இருக்க ஏற்கனவே முடிவு செய்து இருந்தனர்.
இதற்கு அனுமதி கேட்டு மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுப்பதற்காக அய்யாக் கண்ணு அவரது வீட்டில் இருந்து நிர்வாகிகளுடன் புறப்பட்டார். இது பற்றிய தகவல் அறிந்து உறையூர் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்ல வேண்டாம் என்றும் துணை கமிஷனர் நேரடியாக வந்து மனுவை பெற்றுச் செல்வார் என்றும் கூறினர்.
இது குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .திருச்சிக்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்ற என்னை போலீசார் தடுத்து விட்டுச் சிறையில் வைத்துள்ளனர். எத்தனை அடக்குமுறை வந்தாலும் தடையை மீறி போராட்டம் நடக்கும் என்றார்.
விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.