திருச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

திருச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2022-01-23 14:45 GMT

திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ்குமார் (வயது 28). இவர் திருச்சி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வேலை நிமித்தமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றவர். பின்னர் வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் குமார் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதேபோல் திருச்சி சோமரசம்பேட்டை சாய்ராம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (67). சம்பவத்தன்று இவர் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிகிச்சையில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் வருகின்றனர். இந்த வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்து பார்க்கும் போது இது போல நடப்பதால் மனவேதனையடைகின்றனர். அடிக்கடி இது போல் நடைபெறும் இந்த திருட்டை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

Similar News