திருச்சியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் விதித்த கட்டுப்பாடுகள்
திருச்சியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப 2023 ஆம் ஆண்டு முடிவடைந்து 2024 ஆம் ஆண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது .ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்தியாவிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைகள் இல்லை. எல்லையில்லா மகிழ்ச்சியோடு சாதி, மதம், இனத்திற்கு, மொழி இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு 12 மணி அளவில் கொண்டாடப்பட இருப்பதால் இதனையொட்டி இன்று இரவு முதல் நாளை வரை பல்வேறு கொண்டாட்டங்களுக்கு பெரிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்சி போன்ற டயர் டூ சிட்டிகளிலும் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியான முறையில் கொண்டாட பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் மாநகரப் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் போலீசார் இரவு வந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
குறிப்பாக பொதுமக்கள் அதிகம் நடமாடும் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் ஜங்ஷன் ரயில் நிலையம் போன்ற இடங்களில் போலீசார் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கிறிஸ்தவ தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுகின்றனர். இன்று நள்ளிரவு வாலிபர்கள் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது அதிக சத்தத்துடன் வாகனத்தை ஓட்டி செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.