சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி திருச்சியில் மறியல் போராட்டம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி திருச்சியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சீர்மரமிப்பினர் நல சங்க தலைவர்கள் தலைமையில் விவசாயிகள், 68 சாதி சமூகத்தினர் திருச்சி நெம்பர்1 டோல்கேட்டில் மறியல் போராட்டம் நடத்தினர்.
60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ஓய்வூதியம் ரூ.5,000/- வழங்க கோரியும்,அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு DNC, DNT என்று இரட்டை சாதி சான்றிதழ் இருப்பதை ஒரே சாதி சான்றிதழ் DNT-யாக வழங்க கோரியும்,
சட்டமன்ற தேர்தலின் போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் DNT ஒற்றை சான்றிதழ் தருவதாக கூறி மூன்று ஆண்டுகளாகிவிட்டது, உறுதி கூறியதை நிறைவேற்றி தர கோரியும்,சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் நகர் ஏ ஜான் மெல்கியோ ராஜ், சீர்மரமிப்பினர் நல சங்க மாநில பொதுச்செயலாளர் மதுரை தவமணியம்மாள், அகில இந்திய பார்வேர்டு பிளாக் மாநில செயலாளர் திருச்சி காசிமாயதேவர், சீர்மரமிப்பினர் நல சங்க மாநில செயலாளர் தேனி அன்பழகன், ஒருங்கிணைப்பாளர் கடலூர் துரைமணி, முத்தரையர் சங்க நிர்வாகிகள் சூரியபாலு, சுப்ராயன்பட்டி தமிழ்செல்வன், சூரியனூர் சக்தி, ஆகியோர்கள் தலைமையில் விவசாயிகள் மற்றும் 68 சாதி சமூகத்தினர் இதில் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.