ஊராட்சி தலைவருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மனு
ஊராட்சி தலைவருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.;
தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஐயப்பன்,பொதுச் செயலாளர் கோ. சங்கர் மற்றும் நிர்வாகிகள் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சிவராசு வை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
மருங்காபுரி தாலுகா பில்லுப் பட்டி கிராமம் நல்லூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் சின்னக்காளை (வயது56). இவர் தேவேந்திரகுல மேலாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவரை ஐ.ஏ.எஸ். அழகர்சாமி மற்றும் குடும்பத்தினர் கிராமசபை கூட்டத்தில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெயரளவிற்கு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்ன காளையின் அண்ணன் பெருமாள் மனைவி களஞ்சியம் மர்மமான முறையில் இறந்தார்.அவரை அழகர்சாமி குடும்பத்தினர் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அழகர்சாமி குடும்பத்தினர் தொடர்ந்து சின்னகாளைக்கு நேரில் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். ஆதலால் ஊராட்சித் தலைவர் சின்ன காளைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மேலும் அவரது அண்ணன் மனைவி இறப்பில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.