திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது
போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக துபாயிலிருந்து திருச்சிக்கு திருப்பி அனுப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.;
மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). இவர் கடந்த 16-ந் தேதி ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து துபாய்க்கு இந்திய பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்துள்ளார். அங்கு விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிரகாசின் உடைமைகளை சோதனை செய்ததில், அவர் ஸ்பெயின் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் வைத்திருந்த ஸ்பெயின் நாட்டு பாஸ்போர்ட்டை தணிக்கை செய்த துபாய் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிரகாசின் போலியான ஸ்பெயின் நாட்டு பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு, அவரை துபாயில் அனுமதிக்காமல், திருச்சியில் இருந்து பயணம் செய்த அதே ஏர் இந்தியா விமானத்தில் நேற்று அவரை திருச்சிக்கு திருப்பி அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பிரகாஷ் ஸ்பெயின் நாட்டுக்கு செல்வதற்காக போலியாக ஏஜென்ட் மூலம் வெளிநாட்டு பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரகாசை கைது செய்த ஏர்போர்ட் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.