தரமான நெல் விதை உற்பத்திக்கு தொழில் நுட்பங்களை கடைபிடிக்க ஆலோசனை
தரமான நெல் விதை உற்பத்திக்கு தொழில் நுட்பங்களை கடைபிடிக்க உதவி இயக்குனர் ஆலோசனை வழங்கி உள்ளார்.;
திருச்சி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அறிவழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தரமான விதை நெல் உற்பத்தி செய்திட தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும். வரிசை நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி முறையினை பின்பற்றி நடவு செய்திட வேண்டும். தூர் கட்டும் பருவத்திற்கு முன் நீரை வடித்திட வேண்டும். மண் பரிசோதனைப்படி உரமிடுதல் வேண்டும் அல்லது பொது பரிந்துரைப்படி தூர் கட்டும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் பால்பிடிக்கும் சமயத்தில் பிரித்து இடுதல் வேண்டும்.
கலவன் அகற்றுதல் பணி விதை உற்பத்தியின் போது மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அதிக உயரம் மற்றும் மிகவும் குட்டையான செடிகளை நீக்குதல் வேண்டும். பூக்கும் தருணத்தில் முன்னதாக பூக்கும் செடிகள், காலதாமதமாக பூக்கும் செடிகள், மீசை நெல் மற்றும் சிகப்பு பொட்டு நெல் ஆகிய செடிகளை நீக்குதல் வேண்டும். விதைப்பயிர் மணியின் பருமனுக்கு ஒத்து பார்த்து அதை விட பருமனாகவோ அல்லது சன்னமாகவோ உள்ளவற்றை நீக்க வேண்டும். 90 சதவீத விதைகள் பொன்னிறமாக மாறிய பிறகு அறுவடை மேற்கொள்ளலாம். அறுவடையின் போது, நெல் மணிகளின் ஈரப்பதம் 15 முதல் 20 சதத்திற்குள் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.