திருச்சி: தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்லூரி தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரி மாணவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.;

Update: 2021-11-16 14:28 GMT

ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. வகுப்புகள் ஆன்லைனில் நடந்தது. தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. தேர்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பல மாதங்கள் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி விட்டு தற்போது தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நேரடி தேர்வு வைத்தால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். எனவே தமிழக அரசு  இந்த செமஸ்டரை ஆன்லைனில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த  300-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News