நினைவு நாளையொட்டி வ.உ.சி. முக மூடி அணிந்த திருச்சி பள்ளி மாணவர்கள்
நினைவு நாளையொட்டி திருச்சி பள்ளி மாணவர்கள் வ.உ.சி. முக மூடி அணிந்தனர்.
பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அரசு நமது இந்திய திருநாட்டை அடிமையாக வைத்திருந்த காலகட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை மறுக்கப்பட்டது மட்டும் இன்றி இந்தியர்கள் சுயமாக தொழில் செய்யவும் முடியாத நிலை இருந்தது. தொழிலே செய்ய முடியாது என்ற நிலை இருந்தபோது கப்பல் ஓட்ட முடியுமா? முடியவே முடியாது. கடல் நீரில் விளையும் உப்பு காய்ச்சுவதற்கே அனுமதி மறுக்கப்பட்டால் தான் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிரிட்டீஸ் அரசுக்கு எதிராக உப்பு காய்ச்சும் போராட்டத்திற்காக தண்டியாத்திரை நடத்தினார்.
அந்த காலகட்டத்தில் எங்களாலும் கப்பல் ஓட்ட முடியும் என சாதித்து காட்டியவர் வ. உ. சிதம்பரனார். அதனால்தான் அவர் கப்பலோட்டிய தமிழன் என்று வரலாற்றில் போற்றப்படுகிறார். வழக்கறிஞரான அவர் தான் படித்த படிப்புக்கு ஏற்றபடி வழக்கறிஞர் தொழில் செய்திருந்தால் கோடீஸ்வரராக மாறி இருப்பார் .ஆனால் வரலாற்றில் இடம்பெற்றிருக்க முடியாது. ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக சுதேசி கப்பல் இயக்கிய ஒரே தமிழன் மட்டுமல்ல ஒரே இந்தியர் என்ற ஒரே காரணத்திற்காக வெள்ளைக்காரர்களின் அரசு சிதம்பரனாரை பிடித்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைத்தது. கோவை சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? மாடுகள் பூட்டப்பட்ட செக்கினை இழுக்க வேண்டும் என்பதே. சிறைச்சாலையில் செக்கிழுத்து, கல் உடைத்து இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய மாவீரன் அவர். சிறைச்சாலையிலேயே நோயால் பாதிக்கப்பட்டு தனது இன்னுயிரையும் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக இழந்தார்.
திருச்சியில். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது முகமூடி அணிந்து வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு தென்னூர் நடுநிலைப்பள்ளி, கிங் பவுண்டேஷன், திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் ,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையயொட்டி வ.உ.சி.முகமூடி அணிந்து அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார். திருச்சி புத்தூர் கிளை நூலக வாசர் வட்ட தலைவர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிங் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேயன், அறங்காவலர் செபாஸ்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
அப்போது பள்ளி மாணவர்கள் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிகக்கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் ஆவார். சிறைச்சாலையில் செக்கிழுத்து கல்லுடைத்து இந்திய திருநாட்டின் விடுதலைக்காக போராடிய மாவீரன் என பள்ளி மாணவர்கள் நினைவு கூர்ந்தார்கள். பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.